search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடிக்க செல்லவில்லை"

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் இன்று 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. #Fishermen
    நெல்லை:

    நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது வங்காள விரிகுடா கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதால் கடற்கரையோர பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் திருவேங்கடம் அருகே உள்ள சங்குபட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மனைவி சுப்புத்தாய் (வயது55) என்பவர் மக்காச்சோள தோட்டத்தில் வேலை செய்யும் போது மின்னல் தாக்கி பலியானார்.

    இன்று காலையும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நம்பியாறு அணை பகுதியில் 48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    புயல் எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியான உவரி, கூடங்குளம் உட்பட 10 மீனவ கிராமங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடலோர மீனவ கிராமங்களிலும் புயல் மற்றும் மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று 5-வது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கடற்கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான நாட்டு படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் லேசான தூறல் இருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளம் பகுதியில் 25 மி.மீட்டரும், கழுகு மலை பகுதியில் 17 மி.மீட்டரும், கீழஅரசடி பகுதியில் 12 மி.மீ.மழையும் பதிவானது.

    இதற்கிடையே, கடல் பகுதியில் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், இன்று (அக்.9) இரவு வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் யாரேனும் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக கரைதிரும்பும் படியும் அதிகாரிகள் தொலைத் தொடர்பு கருவி கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் மீனவர்கள் மற்றும் கப்பல்களுக்கு புயல் எச்சரிக்கை அளிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நேற்று மாலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கும் பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 704 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 205 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் ஒரு அடி கூடி இன்று காலை 107.25 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 52.76 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 271 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று காலை 84.85 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவி நயினார், குண்டாறு, கொடு முடியாறு, வடக்கு பச்சையாறு ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியாறு-48, பாபநாசம் -34, சேர்வலாறு-26, மணிமுத்தாறு-10, கொடுமுடியாறு-10, குண்டாறு-9, ராதாபுரம்-7, அடவிநயினார்-7, ஆய்க்குடி-6.4, அம்பை-6, நாங்குநேரி-6, செங்கோட்டை-6, கருப்பாநதி-6, ராமநதி-5, சங்கரன் கோவில்-4, தென்காசி-3, சிவகிரி-1.  #Fishermen



    குளச்சலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், வள்ளம், கட்டுமர மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.
    குளச்சல்:

    குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுமரம், வள்ளங்களும் மீன்பிடித்து வருகின்றன. விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று 10-க்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவார்கள். கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் அதிகாலையில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துவிட்டு மதியம் கரைக்கு வருவார்கள்.

    தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. இதனால், அவர்களது விசைப்படகுகள் கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கட்டுமர மீனவர்கள் கரைப்பகுதியில் மீன்பிடித்து வந்தனர்.

    குளச்சலில் நேற்று காலையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரையோரம் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    சில மீனவர்கள் அதிகாலையிலேயே கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களும் கடலில் சூறாவளி காற்று வீசியதால் அவசரமாக கரை திரும்பினார்கள். இந்த மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்கியிருந்தன.

    இதனால், சந்தையில் மீன்வரத்து குறைந்து மீன்களின் விலை உயர்ந்தது. 
    ×